மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.
இதற்கிடையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையான டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் முழுவதும் இன்று நிறைவடைந்தது. ஏர் இந்தியாவின் பங்குகள் டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெடிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்ப்டைக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னதாக இன்று நண்பகலில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனை பிரதமர் மோடி நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு ஏர் இந்தியா முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஏர் இந்தியாவில் சீரமைப்பு பணிகளை டாடா குழுமம் தீவிரப்படுத்தியுள்ளது. நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.