Home இந்தியா வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – பிரதாப் சிங்

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – பிரதாப் சிங்

by Jey

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இதனிடையே, கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் ரானே. இவர் 6 முறை கோவா முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். பிரதாப் சிங் ரானே கோவாவின் போரியம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். போரியம் தொகுதியில் பிரதாப் சிங் 1972 முதல் தொடர்ந்து 11 முறை வெற்றி பெற்றுள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலிலும் போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரதாப் சிங் களமிறங்க இருந்தார்.

இதற்கிடையில், பிரதாப் சிங்கின் மகன் விஷ்வஜித் மற்றும் மருமகள் திவ்யா ரானே ஆகிய இருவரும் பாஜக கட்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், போரியம் தொகுதியில் பிரதாப் சிங்கிற்கு எதிராக அவரது மருமகள் திவ்யா ரானேவையே பாஜக களமிறங்கியுள்ளது. போரியம் தொகுதியில் திவ்யா ரானேவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதனால், காங்கிரசை சேர்ந்த பிரதாப் சிங் பாஜக வேட்பாளரான தனது மருமகள் திவ்யா ரானேவை போரியம் தொகுதியில் எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவானது. இது குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க பிரதாப் சிங் ரானே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

related posts