தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா கட்சி கணிசமான தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
இதற்காக தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சென்னை மாநகராட்சியில் 30 வார்டுகளும், கோவை, திருப்பூர், நாகர்கோவில் போன்ற மாநகராட்சி மேயர் பதவிகளும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா இடையே இட பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, கோட்டக்குப்பம், தருமபுரி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. நேற்று வெளியிட்டது.
298 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இன்று 2-வது கட்ட பட்டியலை வெளியிட அ.தி.மு.க. தயாராகி வருகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ள வார்டுகளை தவிர்த்து மற்ற வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தயாரித்துவிட்டது.
பா.ஜனதாவுடன் உடன்பாடு எட்டப்படும் நிலையில் இன்று மாலை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விடம் பா.ஜ.க 25% வரை இடங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அ.தி.மு.க தரப்பில் 4 முதல் 5 % இடங்களே தர முடியும் என கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கேட்கிறது. இதனால், இரு தரப்புக்குமான பேச்சு வார்த்தை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. – பா.ஜனதா இடையே இட ஒதுக்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில் பாஜக தனித்து போட்டி என தகவல்
சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.