கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி 15-ம் தேதி விசைப்படகில் 11 இந்திய மீனவர்கள், மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ‘என்ரிகா லாக்ஸி’ என்ற இத்தாலிய சரக்கு கப்பல் அந்த வழியாக சென்றது.
அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படையைச் சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர், கடற்கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய மீனவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந்தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர். இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர்கள் இத்தாலி திரும்பினர்.
இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்துக்கு இத்தாலி கொண்டு சென்றது. வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், “இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கை இத்தாலி நீதிமன்றத்தில் நடத்தலாம்” என்று உத்தரவிட்டது.
இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இதையடுத்து, இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது.
இந்த நிலையில், இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான கொலை வழக்கை அந்நாட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.