ஓணான்கள் நம் அனைவரையும் பயந்து ஓட வைக்கும் ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்பதோடு, அமைதியாக மரங்களில், யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் வாழ்கின்றன. ஆனால் சாலையில் செல்லும் போது, எதிர்பாரமல் உங்கள் மீது ஓணான்கள் விழுந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.
ஓணான்கள் போல் தோற்றமுள்ள பேரோந்தி (Iguana) என்பது வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பல்லி வகை உயிரினம். இது அமெரிக்காவின் மத்திய பகுதியிலும், தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது இந்த பேரோந்தி ஆறு கிலோகிராம் வரை எடை இருக்ககூடியது.
புளோரிடாவில் வசிப்பவர்கள், இது ஒரு விசித்திரமான, பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறான குளிர் அதிகமாக இருப்பாதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பேரோந்திகள் குளிர்ச்சியான இரத்தம் கொண்டவை. வெப்பநிலை குறையும் போது அவை மெதுவாக செல்லும் அல்லது அசையாமல் இருக்கும். குளிரினால், உறைந்து போனதால், அவை மரங்களில் இருந்து விழக்கூடும், ஆனால் அவை இறக்கவில்லை, உறைந்து போயுள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
புளோரிடாவில் உள்ள பாம் பீச் மிருகக்காட்சிசாலையில் ஊர்வன நிபுணரான விலங்கியல் நிபுணர் ஸ்டேசி கோஹன், “பேரோந்திகளின் உடல்கள் அவற்றின் செயல்பாடுகளை இழக்கும் போது அவை மரங்களின் கிளைகளில் தூங்குகின்றன, மிகவும் குளிராக இருப்பதால், அவற்றி உடல் செயல்பாடுகளை இழப்பதால், மரங்களை பற்றிக் கொள்ள இயலாமல், அவை மரங்களிலிருந்து கீழே விழுகின்றன ,” எனக் கூறினார்.
“அதிக குளிர் என்பது பேரோந்திகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது, ஏனென்றால் அவை, சூடான தட்ப நிலை நிலவும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலிருந்து பூமத்திய ரேகைக்கு அருகில் காணப்படும் உயிரினம் ஆகும்” என்று அவர் கூறினார்.
குளிர்கால புயல் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ள நிலையில் புளோரிடாவில் மிகவும் குளிர்ந்த வானிலை காணப்படுகிறது. சாலையில் பேரோந்திகள் அதிகம் விழுவதால், வானிலை சேவை இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புளோரிடாவில் வசிக்கும் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30, 2022) தனது முற்றத்தில் “உறைந்த ஓணான்கள்” மிக அதிக அளவில் இருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது