Home இந்தியா செட்டில்மென்ட்’ பத்திரங்கள் தவறாக பதிவு -அரசுக்கு 6,180 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

செட்டில்மென்ட்’ பத்திரங்கள் தவறாக பதிவு -அரசுக்கு 6,180 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

by Jey

தனியார் அறக்கட்டளை சொத்துக்களின், ‘செட்டில்மென்ட்’ பத்திரங்களை தவறாக பதிவு செய்த, திருத்தணி சார் – பதிவாளரின் அலட்சியத்தால், அரசுக்கு 6,180 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ‘சஸ்பெண்ட்’ ஆகியுள்ள சார் – பதிவாளர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்துள்ளது.

தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதன் மொத்த மதிப்பில், 7 சதவீதத்தை முத்திரை தீர்வையாகவும், 4 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். அதேநேரத்தில், குடும்பத்தினருக்கு இடையேயான செட்டில்மென்ட் பத்திரங்களுக்கு, இந்த 11 சதவீத கட்டணம் பொருந்தாது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், மொழி சிறுபான்மையினருக்காக டி.டி.நாயுடு என்பவர், கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதற்காக, அவரது குடும்பத்தினர் சேர்ந்து டி.டி., கல்வி சுகாதார அறக்கட்டளை மற்றும் டி.டி., மருத்துவ கல்வி அறக்கட்டளை என்ற இரு அறக்கட்டளைகளை ஏற்படுத்தினர். இந்த அறக்கட்டளைகள் சார்பாக, டாடாஜி என்பவருக்கு மூன்று செட்டில்மென்ட் பத்திரங்களை, டி.டி.நாயுடு 2019ல் பதிவு செய்தார்.

அப்போது, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான அதிகபட்ச அடிப்படையில், தலா, 29 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த மூன்று பத்திரங்கள் பதிவு செய்ததில், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டது.முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்
அடிப்படையில், திருத்தணி சார் – பதிவாளர் செல்வகுமரனை, ‘சஸ்பெண்ட்’ செய்து, 2019 டிச., 30ல் பதிவுத்துறை உத்தரவிட்டது.

 

இது குறித்து, 2021 நவ., 19ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதிவுத்துறை புகார் அளித்தது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சார் – பதிவாளர் செல்வகுமரன், டி.டி.நாயுடு, டாடாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துஉள்ளனர்.
வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:டி.டி.நாயுடுவின் அறக்கட்டளை பெயரில் இருந்து, இன்னொரு அறக்கட்டளையின் பிரதி நிதிக்கு சொத்துக்கள் கைமாறி உள்ளன. இதை குடும்பத்துக்குள் நடக்கும் செட்டில்மென்ட் பத்திரமாக கருத முடியாது. மேலும், 50 ஏக்கர் நிலம், 2.43 லட்சம் கோடி ரூபாய்; 2.45 லட்சம் கோடி ரூபாய்; 72 ஆயிரம் கோடி ரூபாய் என்ற மதிப்பில், மூன்று பத்திரங்களாக பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், குறிப்பிட்ட நிலங்களில் பல பகுதிகள் அரசு புறம்போக்கு நிலங்கள் என்ற புகாரும், ஆட்சேபனையும் உள்ளது. மொத்தம், 50 ஏக்கர் நிலத்தை, 5.60 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்புக்கு செட்டில்மென்ட் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதிப்பில், 11 சதவீத தொகை பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தகைய வருவாய் இழப்பு ஏற்படுத்தியதால், சார் – பதிவாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிக மதிப்புக்கு பத்திரங்கள் வரும் போது, அது குறித்து ஐ.ஜி., அலுவலகத்துக்கு தெரிவித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆனால், செல்வகுமரன் இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளார்.கல்வி நிறுவனத்தின் பெரும்பாலான சொத்துக்கள், அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விபரம் கூட தெரியாமல், சார் – பதிவாளர் செயல்பட்டுள்ளார். புறம்போக்கு நிலங்களை சேர்த்து எழுதப்பட்ட பத்திரத்தையும் பதிவு செய்து கொடுத்துள்ளார். சார் – பதிவாளரின் இந்த செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இந்நிலையில், இந்த முறைகேடுகள் குறித்த புகாரை விசாரித்த பதிவுத்துறை ஐ.ஜி., அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து 2019 டிச., 30ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், தான் பணி நீக்கம் செய்யப்பட்டது கூட தெரியாமல், அடுத்த நாள் வழக்கம் போல, பத்திரப்பதிவு பணிகளில் செல்வகுமரன் ஈடுபட்டுள்ளார்
.ஆவண எழுத்தர்கள் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய பின், அவர் அலுவலகத்தை விட்டு ஓட்டம் பிடித்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

கடும் அதிர்ச்சி

இந்த விவகாரத்தில், முறையாக சார் – பதிவாளர் செயல்பட்டு இருந்தால், பதிவுத்துறை வாயிலாக அரசுக்கு, 6,180 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருக்கும். பதிவுத்துறையின் ஆண்டு வருவாய் இலக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இந்த இழப்பு பதிவுத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் நடந்த மோசடிகள் குறித்த முழுமையான விசாரணை நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துஉள்ளது.

related posts