தமிழக மீனவர்களுக்கு சொந்தமான, மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும், இலங்கை அரசின் முயற்சிகளை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’ என பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான, மீன்பிடிப் படகுகளை ஏலம் விட, இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக ஏற்கனவே, ஜன., 24ம் திகதி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுப்பிய பதிலில், ‘மீன்பிடிப் படகுகள் ஏலத்தை, இலங்கை தரப்பு தொடராது’ என, உறுதி அளித்திருந்தது.ஆனால், இலங்கை அரசு, தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, ஏல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது, இந்தியத் துாதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம்புரளச் செய்வதாக அமையும்.
எனவே, ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும். 2018ல் பறிமுதல் செய்யப்பட்டு, பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள ௧௨௫ படகுகளை பார்வையிட, அதிகாரிகள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் பயணத்திற்கு, இலங்கை ஒப்புதலை பெற வேண்டும்.
கடந்த, 2018க்கு பின் சிறை பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள, 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்க, பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.