ஆப்கானிஸ்தான், துப்பாக்கி ஏந்தி நடமாடும் தலீபான் பயங்கரவாதிகளின் தேசமாக கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் திகதி மாறிப்போனது. அதில் இருந்து அந்த நாட்டுக்கு சோதனைக்காலம் தொடங்கியது. வெளிநாட்டில் உள்ள 1000 கோடி டாலர் சொத்துக்கள் (சுமார் ரூ.75 ஆயிரம் கோடி) முடக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஊசலாடுகிறது.
மக்கள் ஒரு வேளை உணவுக்கே அல்லாடுகின்றனர். 90 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரசும் தன் பார்வையை அந்த நாட்டின் பக்கம் வைத்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை அந்த நாட்டை சீரழிக்கிறது. என்னவொரு கொடுமை என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்குமே மொத்தம் 5 ஆஸ்பத்திரிகள்தான் கொரோனா சிகிச்சை அளிக்கின்றன.
டாக்டர்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் 33 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. காபூல் நகரில் ஆப்கான் ஜப்பான் தொற்று நோய் ஆஸ்பத்திரி என்ற ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான் இயங்கி வருகிறது. அங்கு உயிரை உறைய வைக்கிற குளிர்காலம் வேறு. நோயாளிகள், போர்வைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
அந்த ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் முகமது குல் லிவால் கூறும்போது, “எங்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி மருந்துப்பொருட்கள் வரை தேவை. 100 படுக்கைகள் இருக்கின்றன. கொரோனா வார்டு நிரம்பி உள்ளது. ஜனவரி இறுதிவாக்கில் தினமும் ஒன்றல்லது 2 நோயாளிகள் வந்தனர். தற்போது கடந்த 2 வாரங்களாக தினமும் 10 முதல் 12 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் மோசமாக உள்ளது” என குறிப்பிட்டார்.
தலீபான்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்கு ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம்தான் வழங்கப்பட்டுள்ளதாம். அதுவும் கடந்த டிசம்பர் மாதம்தான்.
ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில் அதன் சுகாதார உள்கட்டமைப்புகள் மேலை நாடுகளின் நன்கொடையினால் உருவாக்கப்பட்டவை. அவையும் தலீபான்கள் அதிகாரத்துக்கு வந்தபின்னர் பேரழிவை சந்தித்துள்ளன. இது மனிதாபின நெருக்கடி நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் 10 லட்சம் குழந்தைகள் அங்கு பட்டினியால் வாடுகின்றனர்.ஒமைக்ரான் தொற்று அந்த நாட்டை ஆக்கிரமித்துள்ள நிலையில் பரிசோதனைக்கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாத இறுதியில்தான் சோதனைக்கருவிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நேற்று முன்தினம் நிலவரப்படி ஆப்கானிஸ்தானில் 7,442 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகவும், 1 லட்சத்து 67 ஆயிரம் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. அடிக்கடி ஆபத்தானதாக கருதப்படுகிற சந்தேகத்துக்கு இடமான மக்கள் மீது தடுப்பூசிகளை தலீபான் நிர்வாகம் தள்ள முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு 32 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளனவாம். அந்த நாட்டின் மக்கள் தொகை 3.8 கோடி. இவர்களில் 27 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பெரும்பாலோர் ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
அங்கு முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல்கூட சாத்தியம் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியற்ற மக்கள் பணம் கொடுத்து எங்கே முககவசம் வாங்க முடியும்?
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இப்போதைய தேவை வயிற்றுக்குச்சாப்பாடு, அப்புறம்தான் கொரோனா நிவாரணம் என்ற பரிதாப நிலை உள்ளது.