Home இந்தியா மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க.,வில் பூர்வாங்க பேச்சுகள்

மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க.,வில் பூர்வாங்க பேச்சுகள்

by Jey

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்க, தி.மு.க.,வில் இப்போதே பூர்வாங்க பேச்சுகள் ஆரம்பித்துள்ளன. மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தி.மு.க., தரப்பில் ஆறு பேர், மேயர் பதவியை குறிவைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற உள்ள தேர்தல், நகர் முழுதும் பரபரப்பை கூட்டியுள்ளது. ஒவ்வொரு வார்டிலும், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பலருக்கு இப்போதே பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

பெருநகராட்சியாக இருந்த காஞ்சிபுரம், மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையில், அதன் முதல் மேயராக யார் அமரப்போவது என்ற எதிர்பார்ப்பும், அதற்கான பூர்வாங்க வேலைகளும், அரசியல் கட்சியினரிடையே நடைபெறுகின்றன.

மனக்கோட்டைதமிழகத்தில் ஆளுங்கட்சியாக தி.மு.க., உள்ளதால், காஞ்சிபுரம் மாநகராட்சியும் தி.மு.க., வசமே வந்துவிடும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வினர் உறுதியாக உள்ளனர். அதன் அடிப்படையில், மேயர் பதவிக்கு குறி வைக்க, சில பெருந்தலைகள் இப்போதே காய் நகர்த்தி வருகின்றனர்.
ஒரு சில வார்டுகளில் அ.தி.மு.க.,வினர் பலத்தோடு இருந்தாலும், பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க.,வினரே ஜெயிப்பர் என, தி.மு.க.,வினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க., நிர்வாகிகள், தங்களது மனைவி, மகள் ஆகியோரை போட்டியிட வைத்துள்ளனர். மேயர் பதவியை பிடிக்க, குறைந்தபட்சம் 26 கவுன்சிலர்களாவது தேவைப்படும். எனவே, கவுன்சிலர்களுக்கு தேவையானதை செய்ய, பணம் படைத்த கட்சியினர், அவர்களுக்கு தேவையான நிதியை தயார் செய்வதாகவே தகவல்கள் வருகின்றன.

கோடிக்கணக்கிலான பணத்தை இறைத்தாலும், மேயர் பதவியில் இருக்கும்போது அள்ளிவிடலாம் என பலர், மனக்கோட்டை கட்டி வருகின்றனர்.அதாவது, டெண்டர் விடுவதில் துவங்கி, வீடு கட்ட ‘பிளான் அப்ரூவல்’ வரை கமிஷன் பெறுவது தாராளமயமாகிவிடும்.

அதேசமயம், காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையை பெற வேண்டும் என்பதற்காகவும், கடுமையாக போட்டிகள் நிலவும் சூழல் உள்ளது.மொத்தமுள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளில், தி.மு.க., – அ.தி.மு.க., நேரடியாக மோதுகின்றன.

இதில், பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க., வெற்றி பெற்றால் மட்டுமே, இதுபோன்ற மேயர் கனவுகள் பலிக்கும்.ஆனால், அ.தி.மு.க., மற்றும் பிற கட்சியினர் கூடுதலாக வெற்றி பெற்றால், குதிரை பேரத்தில் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அவ்வாறு சூழ்நிலை ஏற்பட்டாலும், பணத்தை வாரி இறைக்க, தி.மு.க.,வில் முக்கிய புள்ளிகள் தயாராக உள்ளனர். தன் மனைவியை, எப்படியாவது மேயராக்க வேண்டும் என, அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.

மேயர் பதவி குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:முதற்கட்டமாக, கவுன்சிலர் பதவியை பிடிக்க, ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வரை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

கவுன்சிலர் பதவியை பிடித்தால்தான், மேயர் பதவிக்கு போட்டி போட முடியும். இன்றைய சூழலில், தி.மு.க.,வில், மேயர் பதவியை பிடிக்கும் போட்டியில், ஆறு பேர் உள்ளனர்.
கட்சி மேலிடம் தலையசைக்க வாய்ப்பு இருந்து, பணமும் செலவழிக்க ஆறு நிர்வாகிகள் உள்ளனர். அவர்களின் மனைவி, மகள் ஆகியோர், இம்முறை போட்டியிடுகின்றனர்.

இவர்களில் ஒருவரை, கட்சி மேலிடம் ‘டிக்’ செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு, மாவட்ட செயலர் சுந்தர், மாவட்ட அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பரிந்துரை மிக அவசியமாக உள்ளதால், அவர்களை ‘தாஜா’ செய்யும் வேலை நடக்கிறது.
மற்ற கட்சியினர் வெற்றி பெற்றால், அவர்களை வளைத்து போட, கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்கும், தி.மு.க.,வில் ஓரிருவர் உள்ளனர்.மேயர் பதவியை கண்டிப்பாக பிடித்தாக வேண்டும் என, மும்முரமாக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

related posts