சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.
அதில் அவர், ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முருகன், சவுதி அரேபியாவில் கட்டிட வேலைக்காக சென்று உள்ளார். அங்கிருந்து ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியது தெரியவந்தது.
ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு செல்ல இந்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதித்தது. இந்த நாடுகளுக்கு சென்று வருபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் பிடிபட்ட முருகனை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.