கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதை கண்டித்து அந்த முஸ்லிம் மாணவிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் கடந்த 9-ந் திகதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10-ந் திகதி உத்தரவிட்டது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்தநிலையில் கர்நாடகத்தில் 14-ந் திகதி உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளுக்கு 16-ந் திகதி வரையும், பிற கல்லூரிகளுக்கு 17-ந் திகதி வரையும் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நாளை (இன்று) உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நான் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். இதில் பள்ளிகளில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதை போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உடுப்பி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளை சுற்றி வருகிற 19-ந்திகதி வரை அதாவது மேலும் 6 நாட்கள் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் குர்மா ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
உடுப்பியில் வருகிற 19-ந்திகதி வரை மேலும் 6 நாட்கள் பள்ளி-கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளையொட்டி 200 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் மக்கள் நடமாட தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொதுஇடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.