Home உலகம் குவாட் அமைப்பின் உந்து சக்தி இந்தியா – அமெரிக்கா

குவாட் அமைப்பின் உந்து சக்தி இந்தியா – அமெரிக்கா

by Jey

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்கும் நோக்கத்தில், கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கின.

இந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் நடக்கும் சீனாவின் அத்துமீறல்கள் குறித்தும், உக்ரைன் – ரஷ்யா இடையில் நிலவும் பிரச்னை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்குகிறது. பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

தெற்காசியாவில் ஸ்திரமான தன்மை உருவாக வேண்டும். சுதந்திரமான இந்தோ – பசிபிக் பிராந்தியம் அமைய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுக்கும். இதற்கு, கூட்டணி நாடான இந்தியாவுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

related posts