“ஷாஹீன் ஷா அப்ரிடி IPL ஏலத்தில் இருந்திருந்தால், அவர் 200 கோடிக்கு போயிருப்பார்” என்று பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் ட்வீட்டுக்கு வந்த எதிர்வினைகள் அவரை வறுத்தெடுத்துவிட்டன. பேசாம, அப்ரிடியை உலக வங்கிக்கு குடுத்து, நாட்டோட கடனை அடைச்சிடலாமே! என்கிற ரேஞ்சுக்கு கலாய்க்கப்பட்டார் பத்திரிக்கையாளர்.
அஃப்ரிடி ஐபிஎல்லில் ரூ 200 கோடி சம்பாதித்திருப்பார் என்று கணிப்பு வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL mega auction) 2022 மெகா ஏலத்தில் பத்து அணிகளும் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் மீது பணத்தை வாரி இறைத்தன. 204 வீரர்களை, இந்த பத்து அணிகளும் வாங்க செலவானத் தொகை சுமார் 552 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு ஐபில் (The Indian Premier League) போட்டிகளில் விளையாட ஐபிஎல் உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றதற்கு கிடைத்த சம்பளம் தான் ஏலத்தொகை
ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் அசத்தலான ஒப்பந்தங்களைப் பெற்றதைக் கண்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட கணிப்பு வைரலானது. அவரை பலரும் ட்ரோல் செய்தனர்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றிருந்தால் ரூ. 200 கோடி (INR 2 பில்லியன்) சம்பாதித்திருப்பார் என்று பத்திரிகையாளர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள முன்னணி வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையிலான கிரிக்கெட் உறவுகளில் இருக்கும் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.
2013 முதல் இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட்டில் (bilateral cricket) விளையாடவில்லை மற்றும் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.