வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் மறைந்த முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 80வது பிறந்த நாள் விழா அந்நாட்டில் நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிழக்காசிய நாடான வட கொரியாவை 1948ல் கிம் இல் சங் நிறுவினார். நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தார். இவர் மரணமடைந்த பின் இவரது மகன் கிம் ஜாங் இல் அதிபராக பதவி ஏற்றார்.
இவர் 2011ல் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து இவரது மகன் கிம் ஜாங் உன் வட கொரிய அதிபராக பதவி ஏற்றார்.முன்னாள் அதிபர்கள் கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோர் பிறந்த நாள் வட கொரியாவின் மிக முக்கிய கொண்டாட்டமாக கருதப்படுகிறது.
பொது இடங்களில் மக்கள் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லாத அந்த நாட்டில் இந்த தினங்களை மட்டும் மக்கள் கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது.இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் மறைந்த முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 80வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.இதற்காக சாம்ஜியோன் நகரில் உள்ள திறந்தவெளி அரங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இசை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கை என கொண்டாட்டம் களைகட்டியது.இறுதியில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேடையில் தோன்றினார். அவரை கண்டதும் மக்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். பின் அவர் தந்தையின் சிலைக்கு மரியாதை செய்தார்.