நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ரயில்களில் ‘டிக்கெட்’ இன்றி பயணித்த 1.78 கோடி பேரிடம் இருந்து, 1,017 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோர் குறித்த விபரங்களை கேட்டிருந்தார்.
அதற்கு ரயில்வே அளித்துள்ள பதில்:நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத 2019 – 2020ம் நிதி ஆண்டில், ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த 1.10 கோடி பேரிடம், 561.73 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த 2020 – 2021ம் நிதி ஆண்டில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், டிக்கெட் இன்றி பயணித்தோர் எண்ணிக்கை 27.57 லட்சம் மட்டுமே. அவர்களிடம் இருந்து 143.82 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில், கடந்த டிச., வரையிலான காலத்தில், டிக்கெட் இல்லாமலும், கூடுதல் ‘லக்கேஜ்’ உடனும், 1.78 கோடி பேர் பயணித்து உள்ளனர். இவர்களிடம் இருந்து 1,017 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.