மிக முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை கொல்வதற்காக, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ள சதி திட்டம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ‘தாவூத் தங்கள் நாட்டில் இல்லை’ என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.இந்நிலையில், நம் நாட்டில் உள்ள மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை கொல்ல, சிறப்பு பிரிவு ஒன்றை தாவூத் இப்ராஹிம் அமைத்துள்ளார் என்ற தகவல், தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தவர் தாவூத் இப்ராஹிம், 66. தன் 14 வயதில், முதல் வழிப்பறியை செய்தார். பின், போதைப் பொருள் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர், நாளடைவில் சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்.கடந்த 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாவூத் இப்ராஹிம் மற்றும் அவருடைய கூட்டாளிகள், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை சமீபத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கர் மற்றும் சிலரிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணைகள் மற்றும் ஏற்கனவே திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீது, என்.ஐ.ஏ., சமீபத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
அதன்படி, தலைமறைவாக உள்ள பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம், நம்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் கொல்ல திட்டமிட்டுஉள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளார்.இதற்காக, ஏராளமான இளைஞர்களை தேர்வு செய்துள்ளார். அவர்களுக்கு ரகசியமாக பணப் பட்டுவாடா நடந்து வருகிறது என்பது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்