துபாயின் புதிய அடையாளமாக விளங்கும் எதிர்கால அருங்காட்சியக கட்டிடம் 255 அடி உயரம் கொண்டதாகும். கோள வடிவிலான வித்தியாசமான அமைப்பில் இந்த கட்டிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக அழகிய 14 அருங்காட்சியகங்கள் பட்டியலில் எதிர்கால அருங்காட்சியகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிப்புறத்தில் அரபி வட்டெழுத்துக்களுடன் கலைநேர்த்தியுடன் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
துபாயின் புதிய அடையாளமாக விளங்கும் எதிர்கால அருங்காட்சியத்தின் கோலாகல திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதனை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கட்டிடத்தில் மொத்தம் 7 தளங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 5 தளங்களில் பார்வையாளர்களை மிரமிப்பூட்டும் பல்வேறு காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த எதிர்கால அருங்காட்சியகத்தை முழுவதுமாக பார்வையிட 2 முதல் 3 மணி நேரம் பிடிக்கிறது.
அருங்காட்சியகத்தில் 2071-ம் ஆண்டை நோக்கிய விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல், சுகாதாரம், வாழ்வியல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. உள்ளே நுழைந்தால் சினிமா செட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக ‘நியூ மூன்’ அதாவது அமாவாசை என்ற தலைப்பில் உள்ள காட்சியமைப்பு நிலவை எப்படி முழு கிரகத்துக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றமுடியும் என்பதை காட்டுவதாக உள்ளது. அதேபோல் பூமியில் இருந்து 600 கி.மீ உயரத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதனை தத்ரூபமாக அங்குள்ள ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள காட்சியமைப்பில் அமேசான் காடுகளில் உள்ளதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரணாலயம் என்ற தலைப்பில் டிஜிட்டல் வாழ்க்கைக்கு மாறான மனதையும், உடலையும் மீண்டும் இணைக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. எதிர்கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கண்காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நேற்று இரவு 7.10 மணியளவில் தொடங்கியது. இதனையொட்டி துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை புரியும் வெளிநாட்டு பயணிகளின் பாஸ்போர்ட்டில் எதிர்கால அருங்காட்சியகத்தின் உருவம் பொறித்த முத்திரை இடப்பட்டது. மெட்ரோ ரெயிலில் அருங்காட்சியகத்தின் மீதுள்ள அரபி வட்டெழுத்துக்களுடன் கூடிய உருவம் பெட்டிகளின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ஏற்படுத்தப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை, லேசர் ஒளிக்காட்சிகள் இடம்பெற்றன. இது குறித்த வீடியோ காட்சியை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
தொடக்க விழாவில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது அருங்காட்சியகத்தின் தலைவர் முகம்மது அல் கர்காவி பேசினார். அதனை தொடர்ந்து அமீரகத்தின் கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு லேசர் ஒளிக்காட்சியில் தத்ரூபமாக அருங்காட்சியத்தின் நாடுவில் உள்ள இடைவெளியில் கண் போன்றும், மேலே இருந்து அருவி கொட்டுவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அருங்காட்சியகம் முழுவதும் வண்ணமயமான லேசர் ஒளிக்காட்சியில் மிதந்ததை நகரில் உள்ள ஆயிரக்கணக்கானோர் நேரிலும், நேரலையிலும் கண்டு ரசித்தனர். பிறகு மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள மேசை போன்ற அமைப்பில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் துணை ஆட்சியாளரும், அமீரக நிதி மந்திரியுமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் தங்கள் கைகளை வைத்து அருங்காட்சியகத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தனர்.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட தடுப்பூசி அல்லது பிசிஆர் பரிசோதனை முடிவுகளை காட்ட தேவையில்லை. பொதுமக்களுக்காக நேற்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இன்று முதல் தினசரி காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இந்த கட்டிடம் ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் மற்றும் துபாய் சர்வதேச நிதி மையம் ஆகிய பகுதிகள் அருகில் அமைந்துள்ளது.
மெட்ரோ ரெயிலில் செல்ல வேண்டுமானால் தி எமிரேட்ஸ் டவர்ஸ் நிலையத்தில் இறங்கினால் நடந்து சென்று விடலாம். சாலை போக்குவரத்தில் 27,29 மற்றும் எக்ஸ் 22 ஆகிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் செல்லலாம்.
வாகனங்களில் செல்வோரில் நுழைவு சீட்டு வைத்துள்ளவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு இலவசமாக வாகனங்களை அங்கு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தி புகைப்படம் எடுக்கும் டிரைபாட் மற்றும் செல்பி ஸ்டிக்குகளுக்கு அனுமதி இல்லை.
பார்வையாளர்கள் தங்கள் உணவுகளை கையில் எடுத்து வந்து அதற்கான இடங்களில் அமர்ந்து சாப்பிடலாம். வளாகத்துக்குள் உணவு பொருட்கள் மற்றும் பானங்களுக்கு அனுமதி கிடையாது. ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் உள்ளன. உள்ளே இலவச வை பை வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.