உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா அங்கீகாரம் அளித்துள்ளது, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். ”ரஷ்யாவின் புதிய அறிவிப்பு, சர்வதேச விதிகளை மீறும் செயல்,” என, போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 2014ல் உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை, ரஷ்யா கைப்பற்றியது. இதற்கிடையே, ரஷ்யாவின் கிழக்கே உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்கள், டான்பாஸ் பிராந்தியம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாதிகள், உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
கடந்த, 2014ல் இருந்து, இந்தப் பிராந்தியத்தின் பெரும்பகுதி, பிரிவினைவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.’மக்கள் குடியரசு’ என்று கூறி கொள்ளும் இந்த பிரிவினைவாதிகள், தங்களுடைய பகுதியை தன்னாட்சி உள்ள நாடாக அங்கீகரிக்கும்படி கோரி வந்தனர். ஆனால், இதை எந்த நாடுகளும் ஏற்கவில்லை. அதில் இருந்து அங்கு நடந்து வரும் உள்நாட்டு போரில், இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகின்றன. ஆனால், அதை ரஷ்யா மறுத்து வந்துள்ளது. அதே நேரத்தில், பிரிவினை வாதிகளுக்கு, ராணுவம், நிதி, கொரோனா தடுப்பூசி என, பல உதவிகளை ரஷ்யா செய்து வந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, ரஷ்ய, ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின், புதிய அறி விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கிழக்கு உக்ரைனில் விடுதலைக்காக நடந்து வரும் போராட்டத்தை அங்கீகரிப்பதாக அவர் கூறியுள்ளார். அதோடு பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி உடைய பகுதியாக அங்கீகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிஉள்ளன. புடினின் இந்த புதிய அறிவிப்பின் வாயிலாக, இனி, பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனுக்கு, தன் ராணுவத்தை ரஷ்யா அனுப்பி வைக்க முடியும். டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகள் தொடர்ந்து உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளன.
அவற்றை பிரிவினைவாதிகள் கைப்பற்ற, ரஷ்ய ராணுவம் உதவும்.இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, உக்ரைனை படிப்படியாக, பிரிவினைவாதிகள் வாயிலாக ரஷ்யா ஆக்கிரமிக்க முடியும். இதற்கிடையே, கிழக்கு உக்ரைனுக்கு, ரஷ்யப் படைகள் விரைந்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அந்தப் பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் முடிவைத் தொடர்ந்து, அது அங்கீகரித்துள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றை நிறுத்தும் உத்தரவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது:இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்த்தோம்.