ஜப்பானின் ராகுடென் இ-வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் ஹிரோஷி மிகிதானி உக்ரைன் அரசாங்கத்திற்கு 1 பில்லியன் யென் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 65 கோடி. மேலும் ஹிரோஷி மிகிதானி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், இந்த 1 பில்லியன் யென், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக உக்ரைன் மீதான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறேன். என்னுடைய எண்ணங்கள் அதிபர் ஜெலென்ஸ்கியோடும் உக்ரைன் மக்களோடும் இருக்கிறது.
நியாயமற்ற சக்தியால் அமைதியான உக்ரைனை மிதிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு சவால் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்றும், உக்ரைன் மக்கள் கூடிய விரைவில் மீண்டும் அமைதி பெற முடியும் என்றும் நான் உண்மையாக நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.
ரஷியாவின் படையெடுப்பை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் உக்ரைனுக்கு நன்கொடைகள் அளித்து வருகின்றன.
ஜப்பான் அரசாங்கம் ரஷியா மீதான சொத்துக்களை முடக்குவதாகவும் ரஷிய இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு குறைக்கடத்திகள் போன்ற முக்கிய ஏற்றுமதிகளை தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.