மேட்டூர் அணையில் காவேரி நீர் வந்து சேரும் இடத்திற்கு சில கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னால் உள்ள மேகதாதுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டால், காவேரி ஆற்றில் வரும் நீர் மற்றும் இடைப்பட்ட பகுதிகளில் பொழியும் மழைநீர் ஆகியவை மேகதாதுவில் சேமித்து வைக்கப்படும் நிலை உருவாகும்.
இதன்மூலம் ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே காவேரி ஆற்றின் குறுக்கே பல அணைகளை கட்டியுள்ள கர்நாடகம், விவசாயம் மேற்கொள்ளும் பரப்பையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதே சமயத்தில், காவேரி ஆற்றின் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் பரப்பு தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது.
”யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கேற்ப, கர்நாடக சட்டசபை தேர்தல் வரப்போகிறது
என்பதற்கு அறிகுறியாக மேகதாது முதல் பெங்களூரு வரை காங்கிரஸ் பாத யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு. கே. சித்தராமையா அவர்கள், மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று பேட்டி அளித்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருப்பது காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான செயல். இதனை எதிர்த்து குரல் கொடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தயங்குவது வருத்தமளிக்கும் செயல்.
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம் என்ற குரல் கர்நாடகாவில் நீண்ட நாட்களாக ஒலித்துக் கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அடுத்த ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதுதான். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானாலும், மேற்படி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கட்ட முடியாது என்று காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும், இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெங்களூர் குடிநீர்த் தேவையையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் நீர்ப் பங்கினை 177.25 டி.எம்.சி. ஆக குறைத்து, அதாவது 14.75 டி.எம்.சி குறைத்து உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில், மீண்டும் பெங்களூர் குடிநீர்த் தேவையையும், மின் உற்பத்தித் திட்டத்தையும் சுட்டிக்காட்டி காவேரி ஆற்றின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்டுவோம் என்று சொல்வதும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்காது என்று கூறுவதும், தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்வதும் நியாயமற்ற செயல்.
இப்போது கூட, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மாதாமாதம் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுவதில்லை. மாறாக உபரி நீரைத் தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அளித்து வருகிறது. உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர்தான் கிடைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியை கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், காவேரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா காவேரி ஆற்றின் குறுக்கே அணையை கட்ட முடியாது என்பதையும், இவ்வாறு கூறுவதே காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் முரணான செயல் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடகாவின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேகதாது திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி உண்டு என்பதை அழுத்தந்திருத்தமாக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.