Home உலகம் உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம்

உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம்

by Jey

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு விமானங்களை அந்தந்த நாடுகள் இயக்கி, மீட்டு வருகின்றன.

அந்த வகையில், உக்ரைனில் போர் சூழலில் இருந்து இந்தியர்கள் மற்றும் மாணவர்களை ஆபரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனிலுள்ள பிசோசின் மற்றும் கார்கிவில் உள்ள ஒவ்வொருவரையும் மீட்க இருக்கிறோம்.

உக்ரைனின் சுமி நகரில் உள்ள எங்களுடைய இந்திய மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பல வழிகளில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இதேபோன்று, எங்களுடைய மாணவர்களையும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், முகாம்களின் உள்ளே இருக்கவும், தேவையற்ற ஆபத்துக்குரிய விசயங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளோம். மாணவர்களுடன், அமைச்சகமும் மற்றும் நம்முடைய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து 11 சிறப்பு விமானங்களில் இன்று 2,135 இந்தியர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். கடந்த பிப்ரவரி 22ந்தேதியில் இருந்து இதுவரை உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்களில் 15,900 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

related posts