கடந்தாண்டு நவம்பர் டிசம்பரில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் 70.50 அடி வரை உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கு உபரியாக வந்த நீர் ஆற்றின் வழியாக சில நாட்கள் திறந்து விடப்பட்டது.
இருப்பில் வைக்கப்பட்ட நீர் மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு மார்ச் 3 ல் நிறுத்தப்பட்டது.
இந்த அணை நீர்மட்டம் நேற்று 68.37 அடி நீர்வரத்து வினாடிக்கு 311 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை தேனி ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேறுகிறது.
கடந்த 3 மாதங்களாக அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர்திறப்பு இல்லாததால் வைகை ஆறு வறண்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுரை திண்டுக்கல் பாசனத்திற்கு இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு முடிந்து விட்டது. கோடையில் பாசனத்திற்கு திறப்பதற்கான சூழல் இல்லை. மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக ஆற்றின் வழியாக அடுத்த மாதம் நீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.