இலங்கையில் பௌத்த ஆலயங்களில் யானைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இலங்கையில் செல்வந்தவர்கள் யானையை தமது வீடுகளில் வளர்ப்பதை கௌரவமாக கருதுகின்றனர். தற்போது பல வீடுகள் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும் யானை தொடர்பான செய்திகளுக்கு இலங்கையின் சிங்கள ஊடகங்கள் முன்னுரிமை வழங்கி பிரசுரிப்பதையும் காண முடியும். இலங்கையின் பௌத்த மற்றும் சிங்கள மத குருமார் பொறுப்பில் இயங்கும் ஆலயங்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது பண்டைய காலம் முதல் நடந்து வரும் சடங்கு சம்பிரதாயமாக இருந்து வருகிறது.
இதனால், இலங்கையில் பௌத்த சிங்கள மக்களின் வாழ்க்கையுடன் யானை என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொருபுறமிருக்க, மரணித்த நெதுங்கமுவ ராசா யானையினை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நடுங்கமுவ ராசாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதற்காக தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த யானை இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஒரு யானையின் மரணம் ஏன் இத்தனை ஆயிரம் மக்களை கண்கலங்க வைத்திருக்கிறது? அதன் வரலாறு என்ன? இலங்கைக்கும் யானைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால், சிங்கள பௌத்த மக்களுக்கும் யானையுடனான உறவு இறைபக்தியுடன் கூடியதாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக இலங்கை பௌத்த மக்களுக்கு யானை என்பது இறைவனின் ரூபமாக பார்க்கிறார்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.
நெந்துன்கமுவே ராஜா என்ற யானை 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் மைசூர் பிரதேசத்தில் பிறந்தது. நெந்துன்கமுவே ராஜா என்ற இந்த யானை மிகவும் உயரமான வளர்ப்பு யானை என்ற வகையில் உலக பிரசித்தி பெற்ற யானையாகும். அத்துடன் தலதா மாளிகையின் எசல பெரஹெர ஊர்வலத்தில் புனித பேழையை சுமந்து செல்லும் பிரதான யானையாகும்.
இலங்கையிலேயே உயரமான யானையான ராஜா, 10.3 அடி உயரமானது. என்பதுடன் அதற்கென தனியாக ஆயுதம் தாங்கிய பாதுகாப்பாளர்கள் இருந்தனர்.
இலங்கையின் பிலியந்தலை நிலம்மஹார விகாரையில் சுகவீனமுற்ற யானை மருத்துவரான பிக்குவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்த இரண்டு குட்டி யானைகளில் ஒன்று. அந்த பிக்குவுக்கு தொடர்ந்தும் யானைகளை பராமரிக்க முடியாத காரணத்தினால், அவற்றை விற்பனை செய்துள்ளார்.
ராஜா மர ஆலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டது. இது சில நேரம் பழைய கர்ம வினையாக இருக்கலாம். எனினும் மர ஆலையின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் யானையை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார். மருத்துவர் தர்ம விஜய யானையை கொள்வனவு செய்ய அக்கறை காட்டியதுடன் அதனை சந்திக்க சென்ற சம்பவம் தீர்மானகரமான சந்தர்ப்பமாக இருந்தது.
இதனடிப்படையில், ராஜாவின் உரிமையாளர் மாறியதுடன் 1978 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தில் உள்ள நெதுன்கமுவே மருத்துவ தோட்டத்தில் இருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜாவின் உடல் அமைப்புக்கு அமைய இது ஆசிய யானைகளில் இருக்கும் சிறப்பான உடலைமைப்பை கொண்டு பத்து யானை வகைகளில் ஒன்று என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த ராஜா என்ற யானை ஏனைய ஆசிய யானைகளை விட மிகப் பெரிய, பலமிக்க யானை. இந்த தந்தங்கள் மிக நீளமானவை என்பதுடன் விசேடமான அடையாளம். இந்த யானை நிற்கும்போது அதன் பாதங்கள், உடல், வால் என்பன கால்களை போல் காட்சியளிக்கும். இது யானையின் முதிர்ச்சியின் அடையாளங்கள். இது சமய பூஜை வழிபாடுகளுக்கு தகுதியானதாக அமைந்தது.
ராஜா என்ற இந்த யானை ஏனைய யானைகளை போல் தலையை குனியாது. இதனால், பின்னால் இருந்து பார்க்கும் போது, விரிவாகவும் தெளிவாகவும் பார்க்க கூடியதாக இருந்தது. ராஜா என்ற இந்த யானை பல கண்காட்சிகளிலும் சமய ஊர்வலங்களிலும் பங்கேற்றுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் இந்த யானை விகாரைகளின் புனித தந்தங்கள் அடங்கிய பேழையை சுமந்து சென்றுள்ளது. இதற்காக யானைக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. பெல்லன்வில, பிற்றகோட்டே, நவகமுவை போன்ற நாட்டின் பிரதான விகாரைகளின் பெரஹெர ஊர்வலங்களில் புனித தந்தங்கள் அடங்கிய பேழைகளை சுமந்து சென்றது.
பல பெரஹெர ஊர்வலங்களின் புத்தரின் புனித பல் அடங்கிய பேழையை சுமந்து சென்றுள்ளது. யானைகள், நடன கலைஞர்கள், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்ளும் நாட்டின் மிக முக்கியமான பெரஹெர ஊர்வலமான கண்டி எசல பெரஹெர ஊர்வலகத்தில் புத்தரின் புனித பல்லை சுமந்து செல்லும் கௌரவம் ராஜாவுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கிடைத்தது.
இந்த நிலையில், இலங்கை பௌத்த மக்களின் பெரும் துயரத்திற்கு மத்தியில் ராஜா நேற்று உயிரிழந்தது. மக்கள் பெருமளவில் சென்று யானைக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.