மயிலாடுதுறை மாவட்டம் ,கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆர்த்திகா என்ற மாணவி உக்ரைன் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். ரஷ்யா போரை தொடங்கியதை அடுத்து தங்களது மகளை மீட்டுத்தருமாறு ஆர்த்திகாவின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை வந்தடைந்த ஆர்த்திகா, இன்று காலை தனது சொந்த ஊரான கோவாஞ்சேரிக்கு வந்தடைந்தார். அவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதா முருகன் சால்வை அணிவித்தும், இனிப்பு கொடுத்தும் வரவேற்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஆர்த்திகா, கார்கிவ் வில் இருந்து போலந்து எல்லைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும், ஒரு நாள் முழுக்க நடந்தே பல கிலோ மீட்டர் பயணித்ததாகவும் குறிப்பிட்டார். மைனஸ் 2 டிகிரி குளிரில் பயணித்தபோது உக்ரைனியர்களுக்கு மட்டும் போர்வைகள் வழங்கப்பட்டதாக வேதனை தெரிவித்த அவர், போலந்து எல்லையை கடந்த பின் இந்திய தூதரகத்தில் நன்கு கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
டெல்லி வந்த பின் தமிழ்நாடு இல்லத்திலும் தங்களை நன்கு உபசரித்ததாகவும், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நல்லமுறையில் வீட்டிற்கு வந்து சேர்ந்ததாகவும் குறிப்பிட்டார். உக்ரைனில் சிக்கியுள்ள மற்ற மாணவர்களையும் விரைவாக மீட்க வேண்டுமென கோரிக்கை விடுத்த ஆர்த்திகா, தங்களது படிப்பை தொடர்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.