Home இந்தியா விளைநிலத்தில் பரவியுள்ள ரசாயன கழிவு நீர்

விளைநிலத்தில் பரவியுள்ள ரசாயன கழிவு நீர்

by Jey

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் பரவியுள்ளது.

இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலை உயிர் மூச்சாக கொண்டு உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி நிர்வாகத்தின் மூலம் 70க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதோடு விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் கச்சா எண்ணெய் எடுத்துவரும் பகுதியில் ரசாயன கழிவுகளை சேமித்து வைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையின் காரணமாக ரசாயன கழிவுகள் சேமித்து வைத்துள்ள குட்டை போன்ற பகுதி நிரம்பி அக்கழிவுகள் அருகில் இருந்த விவசாய கூலி தொழிலாளியான சிமித்ரா சேகர் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலத்தில் பரவியுள்ளது.

இதனால் நிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆகையால் மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலையை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்குவதோடு, கழிவு பரவிய நிலத்தில் உள்ள் மண்ணை முழுவதுமாக மாற்றி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இத்தகைய கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் மாசு ஏற்பட்டு தோல்வியாதி, மூச்சுதிணறல் முதலான சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கண்களில் பலவித நோய்கள் தாக்கும் அபாயமும் எழுந்துள்ளதாக கிராம மக்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒஎன்ஜிசி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வாழும் பொதுமக்களின் நலன்காக்க வலியுறுத்தியும், ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியினை மூட வலியுறுத்தியும் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் நாளை ஈடுபட உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

related posts