பேரிடர்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம்,” என, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், முதலாவது மண்டலமாநாடு சென்னையில் நேற்று துவங்கியது. இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து, தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:சுனாமி, புயல், வெள்ளம்,பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களையும், மனிதர்களால் ஏற்படும் தீ விபத்து, உயிரியல், ரசாயன பேரிடர்களையும் சமாளித்து மக்களை பாதுகாக்கவே, தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இயற்கை அழிக்கப்படுவதால் ஏற்படும் கால நிலை மாற்றத்தால், பெரு வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. இயற்கையை அழிக்காமல், அடுத்த தலைமுறைக்கு பூமியை பாதுகாப்பாக ஒப்படைப்பது நம் கடமை.பேரிடரை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பேரிடர் மேலாண்மையில் மாநில அரசுகளின் பங்கு முக்கியமானது.
அந்தந்த பகுதிகளின் சூழல், மக்களை பற்றி மாநில அரசுகளுக்கு தான் தெரியும். எனவே, பேரிடரை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு அவசியம்.பேரிடர் மேலாண்மையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு பேரிடர் மேலாண்மைக்கு 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.பேரிடரை எதிர்கொண்டதில் கிடைத்த அனுபவங்களை, மாநிலங்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும்.இவ்வாறு இறையன்பு பேசினார்.