ஐந்து மாநிலங்களிலும் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்ற இடங்களை கூட இந்த முறை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. இத்தனைக்கும், முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல், பிரியங்கா ஆகியோர் ஐந்து மாநிலங்களிலும் தீவிரமாக பிரசாரம் செய்தும் அக்கட்சியால் தோல்வியையே பெற முடிந்துள்ளது. காங்., பொதுச்செயலராக இருக்கும் பிரியங்கா, தான் பொறுப்பாளராக இருக்கும் உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஒற்றை இலக்க வெற்றியையே பெற்றுள்ளார்.
இந்தியாவே உற்று நோக்கிவரும் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில், பா.ஜ., முன்பு ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாபில் அக்கட்சி படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது. அங்கு, புதிதாக போட்டியிட்ட ஆம்ஆத்மி அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
மேலும், இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரசின் நேரடி முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட்டணியில் மட்டுமே காங்., இடம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் காங்., கட்சிக்கு தேசிய அளவில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.