நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நேற்று ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நான்கு நேபாள நாட்டினரை நாடு திரும்ப உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பகதூர் டியூபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்கு நேபாள நாட்டினர் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளம் வந்தடைந்துள்ளனர். ஆபரேஷன் கங்கா மூலம் அவர்கள் நாடு திருப்ப உதவிய பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.