சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இன்று (மார்ச் 15) காலை வைகை நதிக்கரையில் வைகை நதிக்கு புஷ்பாஞ்சலி செய்தார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் கூறியதாவது:
புனித வரலாறு நடந்த இடமான மதுரையில் வைகை ஆறு சிறப்பம்சமாகும். மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது உலகத்திலேயே அற்புதமானது தெய்வீகமானது. ஒரு நிகழ்வு மதுரையில் மட்டும்தான் இப்படி நடக்கிறது. வைகையை பார்க்கும்போது மனிதக் கழிவுகளும் குப்பைகளும் நிரம்பி நமக்கே சகிக்க முடியாதபடி இருக்கும் போது வைகை தாய்க்கு எப்படி இருக்கும்.
‛வைகை நதி கழிவறை குப்பை கூடம் அல்ல, பெற்ற தாய்க்கே சமானம். ஒவ்வொரு பொதுமக்களும் வைகை நதியை ஆராதிக்க வேண்டும்’ என்று சென்னை புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் கூறினார்.
மதுரை மாவட்டத்திற்கு வைகை நீர்நிலை தானே வாழ்வாதாரம். நாமே அதிலே கழிவுகளை, குப்பைகளை போட்டுவிட்டு நாமே அதை அருந்துவது எப்படி நியாயமாகும். பலதடவை நான் இங்கு குப்பைகளை அகற்றி உள்ளேன். எனக்கு மனம் தாங்கவில்லை. மதுரை மக்கள் முதல் பணியாக வைகையை அதிகம் நேசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வைகையை சுத்தப்படுத்தும் பணியில் ஒவ்வொரு மதுரை மக்களும் ஈடுபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மனை கும்பிடுவது போல வைகை ஆற்றையும் ஆராதிக்க வேண்டும். பெற்ற தாய்க்கு சமமான வைகை மீது மாசுபடலாமா.
பிரியமுள்ள மதுரை அன்பர்கள் சுத்தமான காற்றினை வைகை மாதாவை சுவாசிக்க விடுங்கள் ஏனென்றால் வைகைதான் நமக்கு சுவாசம் இன்று நான் வைகை தாய்க்கு புஷ்பாஞ்சலி செய்து பூஜித்தேன். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பழங்காலத்தில் உள்ளபடி வைகை பொங்கி ஓட வேண்டும் இதற்கு மதுரை மக்கள் ஆதரவு மட்டுமே பெரும் சேவை என நம்புகிறேன். மதுரை மக்களுக்கு எனது ஆசீர்வாதங்கள். வைகை தாயை போற்றுங்கள் ஆராதியுங்கள். இவ்வாறு சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் கூறினார்.