கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதங்களாக பார்க்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் திகதி முதல் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படத்தொடங்கி பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.
அந்த வகையில் அடுத்தகட்டமாக 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் திகதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் மூலம் தயாரிக்கப்படுகிற கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும். ஆன்லைன் மூலமாவோ, தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களிலோ பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
* இந்த தடுப்பூசிகள் 28 நாள் இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி போடுவதற்கு 12 வயது முடிந்ததை தடுப்பூசியை செலுத்துகிறவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை தடுப்பூசி போட பதிவு செய்து 12 வயதை எட்டவில்லை என்றால் தடுப்பூசி செலுத்தக்கூடாது.
* 12 முதல் 14 வயது வரையிலான பிரிவினருக்கு பிரத்யேக அமர்வுகள் மூலம் தடுப்பூசி போடப்படும். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த தடுப்பூசிகளையும் அவர்கள் திட்டமிடாத நிலையில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 12 முதல் 14 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசிகள் கலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தடுப்பூசி போடுவோருக்கும், தடுப்பூசி குழுவினருக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
60 வயதான அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களும் இன்று முதல் செலுத்தப்படுகின்றன. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் (36 வாரங்கள்) ஆனவர்களுக்கு இந்த முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது.
முதல் 2 டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் எது, யாருக்கு செலுத்தப்பட்டதோ, அதுவே பூஸ்டர் டோசாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.