தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பும் தனியார், ‘டிவி’ சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கிறது. இது தொடர்பாக லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது: புதிய ஒளிபரப்பு உரிமம் கோரியும், பழைய உரிமத்தை புதிப்பிக்க வேண்டியும் வரும் தனியார், ‘டிவி’ நிறுவனத்தின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை தீவிரமாக பரிசோதிக்கிறது. விண்ணப்பித்துள்ள, ‘டிவி சேனல்களின்’ நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக தெரியவந்தால், பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைக்கிறது.
‘தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்புவதாகக் குற்றஞ்சாட்டப்படும் தனியார், ‘டிவி’க்கள், தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்த, போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என, மத்திய அரசு தரப்பில் லோக்சபாவில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட, ‘டிவி சேனலுக்கு’ தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் தன்னிச்சையாக ரத்தாகிறது. ‘டிவி சேனல்கள்’ மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படுகிறது. அவர்களது விளக்கம் திருப்திகரமாக இல்லாதபோது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவை சேர்ந்த, ‘மீடியா ஒன்’ என்ற மலையாள செய்தி ‘சேனல்’ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக கூறி, அதன் ஒளிபரப்புக்கு ஜனவரியில் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சேனல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், ‘மீடியா ஒன்’ நிறுவனம் மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.