Home இந்தியா தி.மு.க.,வினரே நகரெங்கும் பிளக்ஸ் பேனர்

தி.மு.க.,வினரே நகரெங்கும் பிளக்ஸ் பேனர்

by Jey

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஹோப் காலேஜ் பகுதியில் அக்கட்சியினர் வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இன்ஜி., ரகு உயிரிழந்தபோது, ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டார்.

கோவைக்கு நேரில் வந்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இப்போது, தி.மு.க.,வினரே நகரெங்கும் பிளக்ஸ் பேனர் வைக்க ஆரம்பித்திருப்பது, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழக முதல்வரின் உத்தரவை மீறி, தி.மு.க.,வினர் கோவையில் ஆங்காங்கே மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அவற்றை, உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான ஒரு வழக்கில், தி.மு.க., தரப்பில் பேனர்கள் வைக்கப்பட மாட்டாது என. உத்தரவாதம் அளித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கட்சியினர் யாரும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்தபோதும், ஆட்சிக்கு வந்த பிறகும், உள்ளாட்சி தேர்தலின் போதும் கூட, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பெயரில் கட்சியினர், பொதுமக்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக, நகரில் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆரம்பித்து விட்டனர்.

செல்வபுரம், கரும்புக்கடை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க., சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாக இருப்பதாகவும், சாலை விபத்துக்கு வழிவகுப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சி வைத்த பேனர் என்பதால், அவற்றை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் தயக்கம் காட்டுகின்றனர். உயிர் பலி ஏற்படுவதற்கு முன், பிளக்ஸ் பேனர்களை அகற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
மறந்து போனதா முதல்வரே?

 

related posts