சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச விண்வெளி மையத்தின் இயக்கத்தை கண்காணிப்பது, விண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுக்கும்பட்சத்தில் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் பூமி மீது வந்து விழும் என்று ரஷிய விண்வெளித்துறை இயக்குனர் சமீபத்தில் எச்சரிக்கை விடும் வகையில் பேசினார்.
இதுதவிர, விண்வெளியில் அதிக அளவில் குப்பைகளை உருவாக்கிய தனது சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றை கடந்த ஆண்டு ரஷியா அழித்தது.
சர்வதேச விண்வெளி மையம் ரஷியாவுக்கு மேல் பறக்கவில்லை என்று கூறியதுடன், அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷிய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளி துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்றும் கூறி இயக்குனர் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
அவரது இந்த பேச்சால், பல தசாப்தங்களாக விண்வெளியில், ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் நிலை எழுந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு சீனாவும் செயல்பட்டு வருகிறது. இதனால் விண்வெளி துறையில் தன்னிச்சையாக செயல்படும் நோக்கில் புதிய விசயங்களில் சீனா ஈடுபட்டு உள்ளது. எனினும், இது ஆக்கத்திற்கு அல்லாமல், அழிவுக்கான வழியாகவும் இருக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
விண்வெளியில் செயற்கை கோள்களை செயல்படாமல் தடுக்க அல்லது அவற்றை அழிக்க கூடிய திறன் பெற்ற லேசர் ஆயுதம் தயாரிப்பில் சீனா ஈடுபட்டு உள்ளது.
இதுபற்றி தைவான் நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ரிலேடிவிஸ்டிக் கிளைஸ்டிரான் ஆம்பிளிபையர் (ஆர்.கே.ஏ.) என்ற மைக்ரோவேவ் எந்திரம் ஒன்றை சீனா தயாரித்து உள்ளது.
இந்த ஆர்.கே.ஏ. எந்திரம், 5 மெகா வாட் திறன் அளவீடு கொண்ட ஓர் அலையை உருவாக்க கூடியது. இதன் மின்காந்த அலையானது குடிமக்கள் பயன்பாட்டிற்காகவும் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காகவும் உபயோகப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
ஆர்.கே.ஏ. எந்திரம் தரையில் இருந்து கொண்டே வானில் உள்ள இலக்குகளை அழிக்க கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தது இல்லை என்றாலும், செயற்கைக்கோள்கள் மீது இவற்றை இணைத்து விட முடியும். அதன்பின்பு, விண்வெளியில் இருந்து கொண்டு எதிரி நாடுகளின் உணர்திறன் வாய்ந்த மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை எரித்து, அழிக்க கூடிய திறன் பெற்றவை.
டீ.ஈ.வி. எனப்படும் நேரடி ஆற்றல் ஆயுதம் என்ற ஒரு வகையான சாதனங்கள் இதற்காக பயன்படுத்தப்படும். இவை, சக்தி வாய்ந்த மின்காந்த ஆற்றலை பயன்படுத்தி, எதிரியின் சாதனங்களை சேதப்படுத்தவோ அல்லது அழிக்கவோ கூடும்.
எனினும், ஆர்.கே.ஏ. எந்திரம் இந்த வகையை சேர்ந்தது அல்ல என்று சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன் அடிப்படையில் எந்திரம் உருவாக்கப்பட்டால், அது வலிமையான ஒளி கற்றைகளை அதிக வேகத்துடன் அனுப்பி, உலோக பொருட்களை கூட கிழித்து உடைக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் என தைவான் நியூஸ் தெரிவித்து உள்ளது.
உண்மையில், சீனாவின் பீஜிங் நகரை அடிப்படையாக கொண்ட விண்வெளி விஞ்ஞானி ஒருவர் தனது பெயரை குறிப்பிட விருப்பம் இல்லாமல் கூறும்போது, இந்த தொழில்நுட்பம், அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் ஆக செயல்படும். அது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆற்றலை கொண்டிருக்கும் என்று கூறி அச்சம் ஏற்படுத்தி உள்ளார்.
இதனால், சீன ராணுவத்தின் புதிய ஏவுகணைகளை எதிர்கொள்ள விண்வெளி சார்ந்த உணர்திறன் கொண்ட உபகரணங்களை அமெரிக்கா அதிகரிக்க வேண்டும் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட சர்வதேச படிப்புகளுக்கான மையத்தில் பணியாற்றும் தாமஸ் கராகோ என்பவர் தெரிவித்து உள்ளார்.