அமெரிக்காவின் அர்ஹன்சஸ் மாகாணம் டிஷா நகரம் டுமஸ் என்ற பகுதியில் நேற்று இரவு கார் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த கார் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும், அந்த நபர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர் யார்? துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.