Home இந்தியா  ஹிஜாப்  வழக்கில்’ தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல்

 ஹிஜாப்  வழக்கில்’ தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல்

by Jey

‘பள்ளி, கல்லுாரிகளில் ஹிஜாபுக்கு அனுமதியில்லை’ என தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த நபர்களை பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு மாணவியருக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் கல்லுாரி நிர்வாகம் தலையிடுவதாக கூறி ஆறு மாணவியரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, ‘கல்வி நிறுவனங்களுக்கு உரிய சீருடையில் மட்டுமே மாணவ, மாணவியர் வர வேண்டும்’ என கர்நாடக அரசு உத்தரவிட்டது .இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்தன. இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான பெஞ்ச் அந்த வழக்கை விசாரித்தது.பின், ‘பள்ளி, கல்லுாரிகளில் சீருடை அணிய வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவு செல்லும்’ என தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து மார்ச் 17ல் தமிழகத்தின் மதுரை கோரிப்பாளையத்தில், ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பின் சார்பில் போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரகமத்துல்லா, கர்நாடக தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.இது குறித்து, தல்லாகுளம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.

மத, இன, விரோத உணர்ச்சிகளை துாண்டி விட முயற்சி செய்வது, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது, கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் ரஹ்மதுல்லா, மதுரை துணை தலைவர் அசன் பாட்ஷா, மாவட்ட தலைவர் ஹபிபுல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரஹ்மதுல்லா திருநெல்வேலியில் 19ல் கைது செய்யப்பட்டார். திருப்பத்துார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை பெங்களூரு போலீசார், ‘வாரன்ட்’ பெற்று பெங்களூரு அழைத்து வந்துள்ளனர். இங்குள்ள 37வது ஏ.பி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

related posts