கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 70, பற்றிய தகவல்களை, உலக அளவில் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், ‘ஹெர்மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட்’ என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம், புடினுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் விபரம்:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. உலக பணக்காரர் பட்டியலில், புடின் ஆறாவது இடம் வகிக்கிறார். இவரிடம் 700 கார்கள், சில ஜெட் விமானங்கள், 58 ஹெலிகாப்டர்கள், ‘பறக்கும் கிரெம்ளின்’ என்ற சொகுசு விமானம் உள்ளன.
இவரிடம் உள்ள விதவிதமான ‘வாட்ச்’கள் மட்டும், 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. ரகசிய அரண்மனை வைத்துள்ள இவர், கருங்கடலுக்கு மிக அருகே, 1.9 லட்சம் சதுர அடி பரப்பளவில், பிரம்மாண்ட சொகுசு பங்களா கட்டியுள்ளார். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.