13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துதல், மாகாண தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தியாவும், இதன் மூலம் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பது தெடர்பான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அங்கு ஆளும் அரசுகள் இதை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.
இந்த கோரிக்கையை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் நேரில் வலியுறுத்துவதற்காக தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து முயன்று வந்தனர். ஆனால் அவர் ஆட்சி பொறுப்பேற்றது முதலே இந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது.
ஓரிரு முறை இதற்கான வாய்ப்புகள் அமைந்தபோதும், கடைசி நேரத்தில் சந்திப்பு கைவிடப்பட்டது. இதனால் தமிழ் தலைவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே தமிழ் தலைவர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்திக்க வலியுறுத்தி கடந்த மாதம் அதிபர் மாளிகை செயலகம் முன்பு தமிழ் கட்சித்தலைவர்கள் போராட்டம் நடத்தினர். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தபிறகு முதல் முறையாக நேற்று தமிழ் தலைவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்தார். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் 13-வது சட்ட திருத்தத்தை முன்வைத்தே இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என கருதப்படுகிறது.
ஏனெனில், 13-வது சட்ட திருத்தத்தை அர்த்தமுள்ள வகையில் அமல்படுத்துவதே பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் சுமந்திரன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். முதல்-மந்திரியை கவர்னர் கட்டுப்படுத்துவது முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு உதவ தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூறிய சுமந்திரன், இதற்காக வெளிநாடுவாழ் தமிழர்களிடம் இருந்து முதலீடுகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். ஆனால் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்திய பின்னரே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுமந்திரன் உறுதிபட தெரிவித்தார்.