முதல்-அமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்-அமைச்சர் 4 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். முதல்-அமைச்சரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் துபாய் பயண மர்மம் என்றெல்லாம் அடிப்படையில்லாத ஆதரமற்ற புகார்களை பொது வெளியில் பேசிவருவது அருவெறுப்புத் தரும் அநாகரிக அரசியல் ஆகும்.
இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது என கூறினார்.