Home இந்தியா அடையாறு ஆற்றங்கரை பசுமையாவதால்…………?

அடையாறு ஆற்றங்கரை பசுமையாவதால்…………?

by Jey

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அடையாறு ஆற்றங்கரையில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு நில காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட் டம், ஆதனுார் கிராமத்தில் துவங்கி, சென்னை பட்டினம்பாக்கம் வரை உள்ள அடையாறு ஆறு, 42.6 கி.மீ., உடையது. மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், மணப்பாக்கம், சைதாப்பேட்டை வழியாக, பட்டினப்பாக்கம் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு, இடத்திற்கு ஏற்ப, 100 அடி முதல், 1,640 அடி வரை அகலம் கொண்டது. ஆக்கிரமிப்பால், பாதியாக சுருங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட வடகிழக்கு பகுதிகள் மற்றும் தென்சென்னை புறநகர் பகுதியில், மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை, கடலுக்கு கொண்டு செல்லும் பணியை, அடையாறு ஆறு செய்கிறது

லேசான மழைக்கே, ஆற்றில் அதிக வெள்ளம் செல்லும். கன மழை பெய்த, 2015ம் ஆண்டில், இந்த ஆறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆற்றை ஒட்டி உள்ள குடியிருப்புகள் மூழ்கின.பெரும் பாதிப்பின் எதிரொலியாக, சில பகுதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆதனுாரில் இருந்து, மணப்பாக்கம் வரை, 22 கி.மீ.,க்கு, 2017-18ல், 20 கோடி ரூபாயில், துார் வாரி அகலப்படுத்தப்பட்டது; மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திரு.வி.க., பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை, 3 கி.மீ., மற்றும் ஆற்றின் வடக்கு பகுதியில், 1.5 கி.மீ., என, மொத்தம், 4.5 கி.மீ., துாரத்தில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு நில காடுகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 43 வகையான, 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, 2021ல் பணிகள் துவங்கின. இதில் 12 ஆயிரம் சதுப்பு நில தாவரங்கள் நடப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை நாளுக்கு நாள் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. வாகனங்கள் அதிகரிப்பால், மாசு அதிகரித்து, சுத்தமான காற்று கிடைப்பதில்லை. வானுயர கட்டடங்கள், சாலை விரிவாக்கம், புதிய திட்டங்களுக்கான நிலம் எடுப்பு போன்றவற்றால் மரங்கள் வெட்டப்படுகின்றன.

அதற்கு ஈடாக மரம் வளர்க்க, அரசு பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. பூங்கா, சாலையோரம் மரக்கன்றுகள் நடுவது, ‘மியாவாக்கி’ என்ற அடர்வனம் அமைக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பசுமை அதிகரிக்க அடையாறு ஆற்றில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு நில காடுகள் அமைக்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது, 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த பருவ மழைக்கு முன், மீதமுள்ள மரக்கன்றுகளை நட்டு முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.குறிப்பிட்ட பருவம் வரை, சொட்டு நீர் பாசனத்தில் தண்ணீர் ஊற்றப்படும். காற்று, கால்நடைகளிடம் இருந்துசெடிகளை பாதுகாக்க, மூன்று ஆண்டுகள் பராமரிக்கப்பட உள்ளது.

மரக்கன்றுகள் மரம் மற்றும் செடியாக வானத்தை நோக்கி வளரும்போது, அடையாறு ஆற்றங்கரையின் பசுமை அதிகரித்து, இயற்கை சூழலுடன் காணப்படும்.அடையாறு ஆற்றங்கரை பசுமையாவதால், ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் கலப்பு தடுக்கப்படும்.குறிப்பாக சதுப்பு நில காடுகள், புயலின் வேகத்தை குறைக்கும் சக்தி கொண்டவை. மரக்கன்று நடம் பணியை விரைவில் முடிக்க, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடப்படும் மரக்கன்றுகள்

* கடல்பாதாம், பூவரசு, புங்கன், கடல் பூவரசு, கல்யாண முருங்கை, கடல் திராட்சை, புன்னை, மந்தாரை, அத்தி, முள்ளில்லா மூங்கில், நாவல், வேம்பு, ஆலமரம், அரசமரம், மகிழம், அசோகமரம், மலைவேம்பு உள்ளிட்ட 20 மர வகைகள்.
* நொச்சி, செம்பருத்தி, காட்டு கருவேப்பிலை, நந்தியாவட்டை, நித்திய கல்யாணி, கற்பூரவள்ளி, துளசி, மயில் கொறை உள்ளிட்ட 15 செடி வகைகள்
* அலையாத்தி உள்ளிட்ட எட்டு வகையான சதுப்பு நில தாவரங்கள்

சதுப்பு நில தாவரங்களின் பயன்கள்

புயல், வெள்ளம், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்கும் அரணாக, சதுப்பு நில தாவரங்கள் விளங்குகின்றன. ஆற்றில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும். மீன், நண்டு, இறால் போன்ற உயிரினங்களுக்கு உணவாகவும், இந்த
தாவரங்கள் பயன்படும். சதுப்பு நில தாவரங்கள், தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற கடற்கரை ஒட்டிய பகுதியில் உள்ளன.

மரக்கன்றுகள் நடும் முறை

திரு.வி.க., பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை, உள்ள ஆற்றங்கரை, 15 முதல் 20 அடி அகலம் கொண்டது. மண் பரப்பாக உள்ளது. இதில் சைக்கிள் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மண் பரப்பில், இரண்டு பகுதியிலும் மரம் மற்றும் செடி வகைகள் நடப்படுகின்றன. மண் சம பரப்பில் இருந்து, ஆற்றில் சாய்வான மண் பரப்பு, 5 முதல் 10 அடி அகலம் உடையது. இதில், சதுப்பு நில தாவரங்கள் நடப்படுகின்றன. சம பரப்பில், 2 மீட்டர் இடைவெளியில் மரம் வகை மரக்கன்றுகளும், அதன் மைய பகுதி, 1 மீட்டர் இடை வெளியில் செடி வகை மரக்கன்றுகளும் நடப்படுகின்றன.

பறவைகள் வரத்து ஓராண்டுக்கு பின் மரக்கன்றுகள் வளர்ந்து, குறிப்பிட்ட உயரத்திற்கு மரம், செடிகளாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கும். அப்போது, பறவைகள், பட்டாம்பூச்சி, ஓணான் போன்ற உயிரினங்கள் வர துவங்கும். காற்று மாசு குறையும்; வெப்பம் தணியும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

 

related posts