உலகிலேயே இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. அதை மெய்ப்பிக்கும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தலைசிறந்த சைவ திருமடமான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது, ஆக்கூர் பகுதியில் இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் மதபேதமின்றி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.
அதேபோல, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், திருச்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,வும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவருமான இனிகோ இருதயராஜ், ‘திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு, ரோப் கார் வசதி செய்து தர வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘விரைவில் ரோப் கார் வசதி செய்து தரப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.
காரைக்காலில் பக்தர்களால் நிதி திரட்டப்பட்டு கட்டப்பட்ட, விநாயகர் ஆலயத்தின் முன் மண்டபத்தினை, இடித்து அகற்ற முற்பட்டதை கண்டித்து, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த, தி.மு.க., – எம்.எல்.ஏ., நாஜிம் போராடியுள்ளார்.
இந்த சம்பவங்கள் எல்லாம், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூக மக்களின் ஒற்றுமை உணர்வையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன.
மதம் வேறுபட்டாலும், ஒருவருக்கொருவர் பாச உணர்வோடு வாழ்கின்ற, இத்தகைய நல்ல செயல்பாடுகளை, மென்மேலும் போற்றி பாதுகாக்க வேண்டும். ஒன்றுபட்டு வாழ்வோம் என, அனைத்து சமூகத்தினரும் சபதம் ஏற்க வேண்டும்.