கோவை கலெக்டர்அலுவலகத்திற்கு, நேற்று கேனில் பால் மற்றும் இடுபொருட்களுடன் வந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், பால் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு உயர்த்தி தர வலியுறுத்தி, பாலை தரையில் ஊற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான மனுவை, கலெக்டரிடம் வழங்கினர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய சங்கத்தினர் கூறியதாவது:சில மாதங்களாக, கால்நடை தீவனங்கள், இடுபொருட்கள் விலை ஏற்றத்தால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.’ஆவின்’ பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில், மாட்டு தீவனம்மானிய விலையில் வழங்கி வந்தனர். தற்போது, அதை நிறுத்திவிட்டனர். மாட்டு தீவனம் உள்ளிட்ட பொருட்கள், 300 – 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, லிட்டருக்கு 28 – 29 ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால், தற்போது ஆவின் பால் லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளுக்கு மட்டும் விலையை உயர்த்தி தருவதில்லை. தற்போது கொடுத்து வரும் கொள்முதல் விலையை காட்டிலும், லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.