இந்த முறை ஹாலிவுட் திரைப்படம் டிரைலரை போல ஏவுகணை ஏவும் காட்சியை வடகொரியா காட்டியது.
வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. இதன் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது அந்த நாடு. ஆனால் வட கொரியா அரசு நடத்தும் தொலைக்காட்சியில் இது பற்றிய செய்தி ஒளிபரப்பப்பட்ட விதம்தான் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோல் ஜாக்கெட் மற்றும் கறுப்பு நிற கண்ணாடியில் ஹீரோ போல தோன்றிய வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன், திரைப்படத்தில் வருவது போன்ற பின்னணி இசையுடன் வீடியோவில் தோன்றினார்.
15 நிமிட வீடியோ எபெக்ட்ஸ் காட்சிகள் வந்த பிறகு, கிம் ஜாங் உன் ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டு அதில் இருந்து இரு ராணுவ உயரதிகாரிகள், இடதும் வலதும் நடந்து வர மத்தியில் ஹீரோ போல நடந்து வருகிறார் . கறுப்பு கண்ணாடி அணிந்தபடி வரும் அவர் கேமிராவை நேரடியாகப் பார்த்து, “இதை நாம் செய்வோம்” என்று சொல்கிறார்.
ஏவுகணை ஏவப்படும் காட்சிகளுடன் பின்னணியில் இசை கேட்க வட கொரியாவின் “பிங்க் லேடி” என்று மேற்கு நாடுகளில் அறியப்படும் மூத்த செய்தி வாசிப்பாளரான ரி சுன்-ஹீயின் வெற்றிகரமான குரலில் இது பற்றிய செய்தியை வாசிக்கிறார்.