இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் எதிர்கொண்டு திண்டாடி வருகின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது.
இந்தநிலையில், எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்காரணமாக, 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அமல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள், விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் பல இன்னல்களை அனுபவித்து வரும் இலங்கை மக்கள் 10 மணி நேர மின்வெட்டு என்ற அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.