கேரள கோவிலில், ஹிந்து மதத்தை சாராத ஒருவரின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு ‘கலையை மதம் புறக்கணிக்கிறது’ என காங்., – எம்.பி., சசிதரூர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழாவில் மான்சியா என்பவரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏப்., 21ல் நடப்பதாக இருந்தது. சமீபத்தில் அவரை தொடர்பு கொண்ட கோவில் நிர்வாகிகள், அவர் ஹிந்து இல்லை என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என, தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மான்சியா கூறுகையில், ”முஸ்லிமாக பிறந்த நான் ஹிந்து மதத்தை சேர்ந்த வயலின் இசைக்கலைஞரான ஷ்யாம் கல்யாண் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இருப்பினும், நான் எந்த மதத்தையும் சாராதவள்,” என்றார்.
மான்சியாவிற்கு கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு, காங்., – எம்.பி., சசிதரூர் வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கோவில் நிர்வாகிகளின் முடிவால், ஒரு இந்தியன் மற்றும் ஹிந்து என்ற வகையில் ஏமாற்றம் அடைகிறேன். மதம், ஜாதிக்கு அப்பாற்றப்பட்டது கலை. இங்கே, மதத்தால் கலை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை மாறும் என, நம்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.