ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், இம்ரான்கானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவு முறிவை நோக்கி சென்றுள்ளது. உக்ரைன் போர் தொடங்கப்பட்டவுடன் ரஷிய அதிபர் புதினை இம்ரான்கான் சென்று சந்தித்து பேசினார். சீனாவிடமிருந்து ஆயுதங்களை பாகிஸ்தான் அதிகமாக வாங்க தொடங்கியது.இப்படி ரஷிய சீன ஆதரவு நிலைப்பாட்டை இம்ரான்கான் கையிலெடுத்தார்.
உயர்மட்ட ஜெனரல்களுடன் கானின் இந்த மோதல், பாகிஸ்தானை பல மாதங்கள் நிலைத்தன்மையற்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த ஆபத்துகளால், பாகிஸ்தான் இன்னும் சீனா மற்றும் ரஷியாவை நோக்கி நகர்கிறதா அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகர்கிறதா என்பதை இம்ரான்கானின் பதவி தப்புகிறதா இல்லையா என்பது தான் தீர்மானிக்க போகிறது.
பாகிஸ்தானில் அரசியல் விவகாரங்களில் ராணுவம் தலையிடுவதில்லை என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், நிஜத்தில் அங்கு அப்படி அல்ல என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி இம்ரான்கானை தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகளில் விமர்சித்த சில அரசியல்வாதிகளை அழைத்து அவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரிப்பார்கள் என்று தெரிவித்தனர்.
வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் முதல் பொருளாதார முடிவுகள் வரை, பிரதமரின் நிர்வாகத்தின் ஒவ்வொரு கூறுகளிலும் ராணுவ உயர்மட்ட ஜெனரல்கள் ஒரு கருத்தைக் கொண்டிருந்தனர். பாஜ்வா மற்றும் பிற ஜெனரல்கள் தொடர்ந்து உயர்மட்ட வணிகர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தினர்.
ஆனால் ராணுவ பதவி உயர்வுகளில் கானின் ஈடுபாடு மற்றும் அமெரிக்கா உடனான உறவுகளை மோசமாக்குதல் ஆகிய இரண்டு விஷயங்களால், ராணுவத்துடனான கானின் உறவு தொடர்ந்து மோசமடைந்தது.
2018ல் இம்ரான் கான் ஆட்சி பொறுப்பேற்க, ராணுவம் பெரும் பங்கு வகித்தது என்று கூறப்பட்டது. ஆனால் அதனை ராணுவம் மறுத்து வந்தது.
இப்போது உறவு விரிசலை சந்தித்துள்ளதால், இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்பில் ராணுவம் நடுநிலை வகித்து வருகிறது என்று பாகிஸ்தானின் கள அரசியலை நன்கு அறிந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.