கொலம்பியாவில் மெடலின் நகர் அருகே ரியோநிக்ரோ என்ற பகுதியில் ஜோஸ் மரியா கர்டோவா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதில் இருந்து லாத்தம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320-200 ரக வர்த்தக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
இதில், விமானம் தரையிறங்க உதவும் கியர் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்துள்ளது. இதனால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது. இதனால், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனை அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் ஜெய்ர் ஆர்லேண்டோ பஜர்டு நேற்று தெரிவித்து உள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ரியோநிக்ரோவில் இருந்து செல்லும் மற்றும் வருகிற விமானங்கள் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக ரத்து செய்யப்பட்டன. இதனால், மற்ற விமான நிலையங்களில் காலதாமதம் மற்றும் விமான சேவை ரத்து ஆகியவை ஏற்பட்டன.
இதனால், 136 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாதிக்கப்பட்ட 21,245 பயணிகளுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு விட்டது. விமானம் அவரச தரையிறக்கம் பற்றிய காரணங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது என்றும் பஜர்டு கூறியுள்ளார். இதன்பின்பு விமான நிலையம் தற்போது சீராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.