தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது.
பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
குறிப்பாக, ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, அறிவியல் பூர்வமாக தீர்வை நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை முடிப்பதிலும், கல்வித்துறை தரும் பாடத்திட்டத்தை சாராத பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே, ஆசிரியர்களின் கடமையாக தொடர்கிறது.
மாணவர்களை உளவியல் ரீதியாக எப்படி வழிநடத்த வேண்டுமென்ற ஆலோசனை, ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. இதேபோல், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனைகள் மூலம், அறம் சார்ந்த வாழ்வியல் குறித்து, அறிந்து கொள்ளும் வாய்ப்பை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டியது, கட்டாயம் என்பது பலரது கருத்தாக உள்ளது.
மனநல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், ”பாடத்திட்டத்தில் மனநலனிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உளவியல் ஆலோசனை மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில், இதை வழங்குவது கல்வித்துறையின் பொறுப்பு. கண்டிப்பு மிகுந்தாலும், குறைந்தாலும் ஆரோக்கியமான தலைமுறை உருவாவது கேள்விக்குறியே.
நன்னெறி வகுப்புகள் இல்லாததால், தான் செய்வது தவறு என்பதை உணருவதற்கு கூட, சிறார்கள் தயாராக இருப்பதில்லை. உடல், மன ஆரோக்கியம் மேம்படுத்தாமல், கல்வி மட்டும் அளிப்பதால் பலனில்லை.
உளவியல் ஆலோசனை வழங்காததும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம். ஆசிரியர்-மாணவர் உறவை வலுப்படுத்த, கல்வித்துறை சில ஆக்கப்பூர்வ மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்,” என்றார்.