கனேடிய மண்ணில் வைத்தும் புனித பாப்பாண்டவர் மன்னிப்பு கோருவார் என எட்மோன்டனின் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
பூர்வகுடியின மக்களிடம் அண்மையில் வத்திக்கானில் வைத்து பாப்பாண்டவர் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
பூர்வகுடியின மக்களுக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்காக அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாப்பாண்டவர் கனடாவிற்கு விஜயம் செய்து மன்னிப்பு கோர வேண்டுமென பூர்வகுடியின மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கத்தோலிக்க தேவாலயங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த வதிவிடப் பாடசாலைகளில் கற்ற பூர்வகுடியின சிறார்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வத்திக்கானில் வைத்து பாப்பாண்டவர் இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கோரியமை நல்லிணக்கத்திற்கான ஓர் முனைப்பு என குறிப்பிட்டுள்ளார்.
பாப்பாண்டவர் கனடாவிற்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக பேராயர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்த திகதியில் விஜயம் செய்வார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.