Home உலகம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

by Jey

உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு.

ஏப்ரல் 06, 02.09 a.m

மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 06, 01.06 a.m

ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டுக் கப்பல் மரியுபோலில் மூழ்கியதாக கொடிப் பதிவேடு கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06, 12.52 a.m

ரஷிய டார்க்நெட் சந்தை மற்றும் கிரிப்டோ பரிமாற்றத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 06, 12.32 a.m

உக்ரேனில் ரஷ்யாவின் “போர்க்குற்றங்களுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷியாவில் புதிய முதலீடுகளுக்கு தடை உட்பட கடுமையான புதிய தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ஏப்ரல் 06, 12.15 a.m

கிழக்கு உக்ரைனில் அமில கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் திகதி தொடுத்த போர், 2-வது மாதமாக நீடிக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், கெர்சன், செர்னிஹிவ் என பலநகரங்களில் கட்டமைப்புகளை ரஷியா தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களால் அழித்தன.

இந்த நகரங்களில் குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் தாக்கப்பட்டு, எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. ஆனாலும் ரஷியா நினைத்தபடி தலைநகரை பிடிக்க முடியவில்லை. உக்ரைன் படைகள் துணிச்சலுடன் எதிர்த்து நின்று சண்டை போடுகின்றன.

இந்த போரில் ரஷிய படைகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. இதுவரை 18 ஆயிரத்து 500 ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 676 டாங்கிகள், 1,858 கவச வாகனங்கள், 150 போர் விமானங்கள், 135 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவே 1,351 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

தலைநகர் கீவைச்சுற்றிலும் உள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ள நிலையில், அங்கு 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பாவி மக்களை கொன்று தெருக்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் உடல்கள் வீசப்பட்ட புச்சா நகரில், சித்ரவதை செய்வதற்கென்றே ஒரு அறை இருந்ததாக உக்ரைனிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் சுகாதார மையத்தின் அடித்தளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

புச்சா தேவாலய கல்லறை தோட்டத்தின் முனையில் கருப்பு பிளாஸ்டிக் உறைகளில் சுற்றப்பட்ட உடல்கள் காணப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் பலரும் கார்களில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் அல்லது நகரை விட்டு வெளியேற முயன்றபோது குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன. புச்சாவில் அரங்கேறிய போர்க்குற்றங்களுக்கு உலக அளவில் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இப்போது ரஷிய படைகள் தங்கள் கவனத்தை கிழக்கு உக்ரைன் பக்கம் திருப்பி உள்ளன. அங்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நைட்ரிக் அமில கிடங்கின்மீது ரஷிய படைகள் தாக்கி உள்ளன. இதை உறுதிப்படுத்திய அந்த மாகாண கவர்னர் செர்ஹி ஹைடாய், ரூபின்ஸ்னே அருகில் நைட்ரிக் அமில சேமிப்பு கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால், அது சருமத்துடன் தொடர்பு கொண்டால் அது ஆபத்தானது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவுகள், ஜன்னல்களை மூடிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும். ஈரமான முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷிய படைகள் கைவிடவில்லை. வரும் வாரங்களில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் கவனம் செலுத்த முயற்சிக்கும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், டென்மார்க் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயினும் ரஷிய தூதரையும், அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு எடுத்துள்ளது.

related posts