உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விலை, நாளுக்கு நாள் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மாத சம்பளதாரர்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.கடந்த சில நாட்களாக, கோவையில் மளிகை மற்றும் எண்ணெய் வகைகளின் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும், பிரதானமாக உக்ரைன் போரையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையுமே வியாபாரிகள் முன்வைக்கின்றனர். மாதாந்திர சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்துவோர், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், செலவை சமாளிக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த விலை உயர்வு நிரந்தரமாகுமா அல்லது சில காலங்களுக்கு பின் குறையுமா என்பது குறித்து, தமிழக வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் கூறியதாவது:மளிகை பொருட்கள் விலை ஓராண்டில் ஒரு முறை உயரும்; மற்றொரு முறை குறையும். மார்ச், ஏப்., மாதங்களில் மளிகை பொருட்கள் வரத்து அதிகமாக இருக்கும்போது விலை குறையும். ஆறு மாதங்களை கடந்து, மழைக்காலத்தில் இருப்பு குறையும்போதும், பண்டிகை, திருமண வைபவம் மற்றும் விழாக்காலங்களில் மளிகை மற்றும் எண்ணெய் வகைகளுக்கு தேவை ஏற்படும் போதும் விலை உயரும்.
இது, தவிர்க்க முடியாதது. எதிர்பாராமல் வரும் தொடர் கன மழை, வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவு காலங்களில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்கள் வந்து சேர்வதில் சிரமம் ஏற்பட்டால், விலை உயருவதற்கு வாய்ப்பு அதிகம்.அவ்வகையில், தற்போது உக்ரைன் போர் காரணமாக, பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு, 95 ரூபாயில் இருந்து, 145 ஆக உயர்ந்துள்ளது.
சன் பிளவர் ஆயில், 130 ரூபாயில் இருந்து, 190 ஆக உயர்ந்துள்ளது.இதேபோல், பெரும்பான்மையான மளிகை பொருட்கள் விலை உயர்ந்திருக்கிறது. இனி, அடுத்தடுத்து வரும் சூழ்நிலைகளுக்கேற்ப, விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும்.இவ்வாறு, கணேசன் கூறினார்.